பொங்கல் விடுமுறைக்கு பின்னர் உற்பத்தி துவங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் !!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் உற்பத்தி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறைக்கு பின்னர் உற்பத்தி துவங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் !!

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்துவரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே விடுதியில்  தரமற்ற உணவு வழங்கப்படுவதாகப் புகார் எழுந்ததையடுத்து, அந்நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி போராட்டத்தில் இறங்கினர்.

பெண் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம் நடத்தினர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தொழிலாளர்களிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார். 6 பெண்களில் 2 பெண்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டதாகவும், மீதமுள்ள 4 பேர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

இதுமட்டுமில்லாமல் சம்பவ இடத்திற்கு விரைந்த அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கணேஷ் ஆகியோர் பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அப்பெண்கள் அங்கிருந்து சென்றனர். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர் பணியாற்றுபவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவது கிடையாது அவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடம் சுகாதாரம் ஆகியவை முறையாக கிடையாது என்ற குற்றச்சாட்டை அமைச்சர்கள் மத்தியில் பெண்கள் முன்வைத்தனர்.

இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், 23.12.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தொழில் துறைக்கான அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு கூறிய ஆலோசனைகளைத் தவறாமல் செயல்படுத்துவதாக ஃபாக்ஸ்கான் நிறுவனமும் உறுதி அளித்திருக்கிறது. 

இதன் விளைவாக, ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதற்கட்டமாக இரண்டு விடுதிகளில் தங்கியிருக்கக்கூடிய 500 தொழிலாளர்கள் மூலம் இன்று  உற்பத்தியைத் தொடங்க உள்ளது என்ற செய்தியும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்தின் மூலம் ஏறத்தாழ, 18,750 பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்கள் மற்றும் பிற நிறுவன ஊழியர்கள் தங்குவதற்கேற்ப வல்லம் வடகாலில் ஒருங்கிணைந்த தங்கும் விடுதி கட்டப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்த்த நிலையில் போதிய ஊழியர்கள் இல்லாததால் இன்று உற்பத்தி துவங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.  முன்பாக கடந்த இரண்டு நாட்களாக 250க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு மேலாக தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.  நாளை மறுநாளிலிருந்து பொங்கல் விடுமுறை துவங்க உள்ளதால் பெரும்பாலான ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப ஆர்வம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு பிறகு மீண்டும் நிறுவனத்தில் உற்பத்தி துவங்க அதற்கான வாய்ப்பு இருப்பதாக தொழிற்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்ட ஊழியர்கள் 150 ஊழியர்களுக்கு மட்டுமே தற்போது பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அவர்கள் மட்டுமே இன்று பணிக்கு திரும்பி இருப்பதால், போதுமான ஊழியர்கள் இல்லாததால் உற்பத்தி துவங்க படவில்லை என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.