ஜாமீனில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.. அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!!

நில மோசடி உள்ளிட்ட வழக்குகளில் ஜாமீன் கிடைத்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை, புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

ஜாமீனில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.. அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவர் தாக்கப்பட்டார்.

அவரது சட்டையை கழற்றி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன. 

இவ்வழக்குகளில் ஜாமீ்ன் வழங்க கோரி, ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. 

ஜெயக்குமார் மீதான 3 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததால், இன்று சென்னை புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுகவை அழிப்பதற்காக தமிழக அரசு பொய் வழக்கு போடுவதாக தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க முயன்ற தன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.