முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.!!

5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு வரும் மார்ச் 11- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.!!

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் தனது சகோதரரும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மருமகனுமான நரேஷ் என்பவர், கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கள் இருவருக்கும் பங்குள்ள ASHWIN FISHINGNET என்ற நிறுவனத்தை, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தூண்டுதலின்பேரில் அவரது அடியாட்களைக் கொண்டே நவீன், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மகள் ஜெயபிரியா ஆகியோர் தனது 5 கோடி மதிப்புடைய தொழிற்சாலையையும் மற்றுமொரு திருமண மண்டபத்தையும் அபகரித்ததாகக் மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.

முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக மகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 24 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அவரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் ஆகியோர் மீது கூட்டு சதி, அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கி கொள்ளையில் ஈடுபடுதல், வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்துதல், குற்றச்செயல் புரிய தூண்டுதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை இந்த வழக்கில் கடந்த 25- ஆம் தேதி கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் ஜெயகுமாரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் ஆகியோர் தலைமறைவாக உள்ளதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்தநிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வரும் மார்ச் மாதம் 11- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளது.