5 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை கேட்டு முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி...

கடந்த 1991-96 ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்பட மூன்று பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

5 ஆண்டுகள் சிறை  தண்டனை   தீர்ப்பை கேட்டு முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி...

தமிழக  சமூக நலத்துறை அமைச்சராக 1991 – 1996 காலக்கட்டத்தில் இருந்தவர் இந்திரகுமாரி. அந்த சமயத்தில், அவருடைய கணவர் பாபு நடத்தி வந்த வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளுக்கான பள்ளி துவங்குவதாக கூறிய இரு அறக்கட்டளைகளுக்கு சமூக நலத்துறை சார்பில் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று சமூக நலத்துறையின் அப்போதைய செயலாளர் லட்சுமி பிரானேஷ் அளித்த புகாரின் பேரில், இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, கிருபாகரன் (இறந்து விட்டார்), சண்முகம், வெங்கட கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது  வழக்கு பதிவு ஊழல் தடுப்பு சட்டம்  மற்றும் இந்திய தண்டனை சட்டத்த்தில் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல். ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கை விசாரித்தது.அனைத்து விசாரணைகளும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தார்.

 குற்றம் சாட்டப்பட்ட கிருபாகரன் இறந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட நீதிபதி, வெங்கடகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு.

 இந்த தீர்ப்பை கேட்டதும் முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி நீதிமன்ற அறையிலேயே நெஞ்சு வலியில் அவதிப்பட்டுள்ளார் , இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு நீதிபதி  கூறியுள்ளார், உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் அவரது வாகனத்திலேயே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று  அனுமதிக்கப்பட்டுள்ளார்.