மன உளைச்சலால் மரணத்தை தேடிய முன்னாள் அரசு அதிகாரி... லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால் விபரீத முடிவா..?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம், தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலால் மரணத்தை தேடிய முன்னாள் அரசு அதிகாரி... லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால் விபரீத முடிவா..?

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம், தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.  

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் வெங்கடாச்சலம் ஓய்வு பெற இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 23-ம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், அவரது வீடு உட்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணம், 11 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து, தமது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் மற்றும் சொத்து சேர்ப்பில் ஈடுபட்டதாக, வெங்கடாசலம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள தமது வீட்டில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையில் பணம், தமது மனைவியின் நகைகள் உள்ளிட்ட அனைத்தும் பறிபோனதால், வெங்கடாச்சலத்துக்கும் அவரது மனைவிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த வெங்கடாச்சலம், தமது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதற்கு முன்னதாக தமது மனைவிக்கு 3 லட்ச ரூபாயும், வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்மணிக்கு சிறிது பணமும், வெங்கடாச்சலம் கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.