இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டின் விருதுநகரில்....!!

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டின் விருதுநகரில்....!!

விருதுநகரில் அமைய உள்ள பிஎம் மித்ரா பூங்கா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில் மற்றும் ஜவுளி பூங்காக்களுக்கும் மகுடமாக திகழும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தொிவித்துள்ளாா்.

விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா பூங்கா அமையவுள்ளது.  அதற்கான தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங் கேற்று பேசுகையில், தொழில் துறையை பொறுத்தவரை உலக அளவிலான கவனத்தை தமிழ்நாடு ஈர்த்துள்ளது எனவும் நாட்டின் கைத்தறி துணி வர்த்தகத்தில் தமிழ்நாடு மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் விருதுநகரில் அமைய உள்ள பிஎம் மித்ரா பூங்கா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில் மற்றும் ஜவுளி பூங்காக்களுக்கும் மகுடமாக திகழ போகிறது எனவும், பூங்கா முழு அளவில் செயல்படும்போது 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர் இது தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் எனவும் 2030-31-ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்ட மத்திய அரசு உதவிட வேண்டும் எனவும் கோாிக்கை விடுத்தாா்.  

அதனைத் தொடர்ந்து அவா் இந்திய அளவில் மட்டுமல்லாமல் தெற்காசியாவிலேயே சிறந்த தொழில் வளர்ச்சி மாநிலமாக உருவாக்கிட நாம் அனைவரும் இணைந்து  பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.  இந்நிகழ்வில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஸ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் கே. கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஆர்.காந்தி. மா.சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

இதையும் படிக்க:   இந்தியா இதில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்... இன்னும் தாமதமில்லை!!