பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலையான பெண்...நீதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்..!

ராமேஸ்வரம் அருகே பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலையான பெண்...நீதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்..!

ராமேஸ்வரம் வடகாடு கிராமத்தில் நேற்று கடல்பாசி சேகரிக்கச் சென்ற சந்திரா என்ற பெண், அந்த பகுதியில் உள்ள  தனியார் இறால் பண்ணை அருகே முள்காட்டிற்குள் நிர்வாண நிலையில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக பண்ணையில் இருந்த வட மாநிலத் தொழிலாளர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

இந்தநிலையில் சந்திராவின் கொலைக்கு நீதி கேட்டு வடகாடு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். உயிரிழந்த சந்திராவின் மகள் திடீரென தீக்குளிக்க முயன்றதாலும், சாலையில் சிலர் டயர்களை போட்டு தீ வைத்ததாலும் பதற்றமான சூழல் நிலவியது. 

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.  
இதனிடையே மறியலில் ஈடுபட்டவர்களுடன்  வருவாய்த்துறையினர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான் உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சந்திராவின் குடும்பத்திற்கு சட்ட மன்ற உறுப்பினர் 2 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கினார்.

தொடர்ந்து இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து 5 மணி நேரத்திற்கு பின் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இதனிடையே சம்பந்தப்பட்ட இறால் பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.