
கீழடியில் தற்போது 15 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.
கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வை கடந்த பிப்ரவரி 13ம் தேதி தமிழக தொல்லியல் துறை தொடங்கியது. இதனை தொடர்ந்து மணலூரில் கடந்த மே 5ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கீழடி பகுதியில் நடைபெற்று வரும் 7ம் கட்ட அகழாய்வு பணிகளையும்,12 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அகழ் வைப்பகம் கட்டுமான பணிகளையும், அமைச்சர்கள் எ.வ.வேலு, பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன், மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் பேசிய எ.வ.வேலு, கீழடி அகழ் வைப்பகம் பணிகள் 60 சதவீதம் முடிந்திருக்க வேண்டும் எனவும் ஆனால் தற்போது 15 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து பல்வேறு புகார்கள் முதலமைச்சருக்கு வந்ததை அடுத்து தாங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டதாகவும் கூறினார்.