ஓணத்திற்கு தயாராகும் பூக்கள்! விவசாயிகள் நம்பிக்கை!

ஓணம் பண்டிகை ஒட்டி, பூக்கள் வியாபாரம் செழிக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு உருவாகியுள்ளது.

ஓணத்திற்கு தயாராகும் பூக்கள்! விவசாயிகள் நம்பிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் ஓணம் பண்டிகைக்காக அறுவடைக்கு தயார் நிலையில் பூக்கள் உள்ளன. இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்பு கேரளாவில் இந்த ஆண்டு திருவோண பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சரிந்து போன தங்கள் பூ வியாபாரம் மீண்டும் செழிக்கும் என குமரி மாவட்ட பூ விவசாயிகள் நம்பிக்கையாக உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை, தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா மாநில அளவிலும் புகழ் பெற்றதாகும். ராயக்கோட்டை, ஓசூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் பெங்களூர் என பல பகுதிகளிலிருந்தும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தினந்தோறும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் வருகிற செப்டம்பர் 8ம் தேதி கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைகளில் மலையாளம் பேசும் மக்களால் மிக விமரிசையாக கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளில் ஒன்றான திருவோணம், சுமார் 10 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த பத்து நாட்களில் வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ எனப்படும் பூக்கோலமிடுவது வழக்கம். இந்த பத்து நாட்களில் சிறந்த அத்தப்பூ கோலம் இடுபவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் அங்கு வண்ண பூக்கள் அதிகமாக தேவைப்படுவதால் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தோவளையில் இருக்கும் புகழ்பெற்ற மலர் சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவலால் கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்த நிலையில், தற்பொழுது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

இதன் காரணமாக தோவாளை செண்பகராமன் புதூர் போன்ற உள்ளூர் பகுதிகளில் கிரேந்தி, செவ்வந்தி, வாடாமல்லி, சம்பங்கி போன்ற பல வண்ண மலர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருவோணப்ண்டிகையை ஒட்டி, பூ வியாபாரம் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கையில் பூ விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் காத்திருப்பதாக தெரிவித்தனர்.