தேனியில், கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சாிக்கை!

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து உபாி நீா் வெளியேற்றப்படுவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மழையை ஒட்டி உள்ள சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தென் மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாது போனதால் அணைக்கு நீர் வரத்து இல்லாமல் போனது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து துவங்கியது. இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கிய நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் அணையின் முழு கொள்ளவான 126.28 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.  

இதனால் பெரியகுளம், வடுகபட்டி, மேலங்களம், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்பொழுது அணைக்கு நீர் வரத்து 8 கன அடியாக உள்ள நிலையில், அணையில் மொத்த நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது. 

மேலும் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளதால் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.