தமிழக மீனவர்கள் மீது, கிருமி நாசினி பீய்ச்சி அடித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படை மீது மீனவர்கள் குற்றச்சாட்டு..
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீது, கிருமி நாசினி பீய்ச்சி அடித்து மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக தேசிய மீனவர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த, தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ, கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 69 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மீனவர்கள் ஒவ்வொருவரையும் கையை உயர்த்தி நிற்கச் செய்து, அவர்கள் மீது கிருமிநாசினி பீய்ச்சி அடித்துள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை கடற்படையின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், கட்டடம், வாகனம் போன்ற உயிரற்ற பொருட்கள் மீது தெளிக்கக்கூடிய கிருமிநாசினியை மீனவர்கள் மீது பீய்ச்சி அடித்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும், கொரோனா காலத்தில் கூட இதுபோன்ற கொடுமை நிகழ்ந்தது இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.