75 ஆவது சுதந்திர தின விழா.ஒத்திகை நடைபெறும் நாட்களில் போக்குவரத்தில் மாற்றம்!!

75 ஆவது சுதந்திர தின விழா.ஒத்திகை நடைபெறும் நாட்களில் போக்குவரத்தில் மாற்றம்!!

75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது.

சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சி

75-வது சுதந்திர தின விழாவை வருகிற 15-ந்தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற உள்ளது.  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் ஆண்டாக தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுதந்திர தின விழாவிற்கான முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இரண்டாவது நாள் ஒத்திகை நிகழ்ச்சி 9ம் தேதியும், இறுதி ஒத்திகை நிகழ்ச்சி 13ம் தேதியும் நடைபெற உள்ளது. 

போக்குவரத்தில் சில மாற்றங்கள்

சுதந்திர தின விழா ஒத்திகை நடைபெறும் மூன்று நாட்களில் காலை 6.30 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்தில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும்.

அதேபோல, காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (என்.எப்.எஸ். ரோடு) வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

போக்குவரத்து காவல்துறை

முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.