அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பு... புகை மூட்டமாக மாறிய சென்னை...

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியதால், பல்வேறு இடங்களில் புகை மண்டலமாக காட்சியளித்தது.

அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பு... புகை மூட்டமாக மாறிய சென்னை...

தமிழகம் உள்பட நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சென்னையில் காலையிலேயே மக்கள் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து, சாமி தரிசனம் செய்த பின், பட்டாசு வெடிக்க கிளம்பினர். ஆனால், பெரும்பாலான இடங்களில் மழை பெய்ததால், காலையில் மிகப்பெரிய அளவில் பட்டாசு சத்தங்கள் கேட்கவில்லை. ஆனால், நேரம் செல்ல செல்ல வானம் பளிச்சென தோன்ற, அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து மக்கள் பட்டாசு வெடித்தனர். இதனால் போலீசார் தரப்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மாலை நேரம் முடிந்து இரவு வந்ததும், மக்கள் உற்சாகமாகி சக்கரம், புஸ்வானம், ராக்கெட், மத்தாப்பு உள்ளிட்ட வெடிகளை வெடிக்க ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம்தான் என்பதை மனதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து பட்டாசு வெடிக்க ஆரம்பித்தனர். இதனால் எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் பட்டாசு புகையால் சூழ்ந்து காணப்பட்டன. ஏற்கனவே, பருவமழை காரணமாக கருமேகம் சூழ்ந்து வானம் இருண்டு காணப்பட்ட நிலையில், பட்டாசு புகையால் பார்க்க முடியாத அளவிற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. மார்கழி மாதம் பனி சூழ்ந்து காணப்படுவது போல, சாலைகள் காணப்பட்டன. இதனால் எதிரே வரும் வாகனத்தை பார்க்க முடியாத அளவிற்கு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நடந்து செல்பவர்களுக்கு கூட, எதிரே வரும் வாகனங்கள் மிக அருகில் வந்த பின்னர்தான் தெரிந்தது.