திருமணமான ஒரே ஆண்டில் பெண் தற்கொலை... உறவினர்கள் சாலை மறியல்...

மணப்பாறை அருகே திருமணமான ஒரே ஆண்டில் இளம் பெண் தற்கொலை. பிரேத பரிசோதனைக்கு காலதாமதம் ஆனதால்  உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணமான ஒரே ஆண்டில் பெண் தற்கொலை... உறவினர்கள் சாலை மறியல்...

திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துஆவாரம்பட்டியைச் சேர்ந்த தாவீத்ராஜ் என்பவரது மகள் சினேகா பிரிட்டோமேரி (வயது 21) இவருக்கும் திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம், நொச்சிமேடு பகுதியைச் சேர்ந்த பீட்டர் ராயர் மகன் பிரான்சிஸ் சேவியர் வயது 27. என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் சினேகா ஏற்கனவே இரண்டு முறை கருத்தரித்து அது கலைந்த நிலையில் தற்போது மீண்டும் கருத்தரித்து மருத்துவ பரிசோதனையில் முறையாக சிசு வளரவில்லை என்று கூறி அதனையும் கலைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சினேகா மிகுந்த மன உலைச்சலில் காணப்பட்டுள்ளார். நேற்று மதியம் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை சினேகா குடித்துள்ளார். வெளியில் யாரிடமும் கூறாத நிலையில் இரவு அவரது உடல்நிலையில் மாற்றம் இருந்ததைக்கண்டு அவரது கணவர் பிரான்சிஸ் சேவியர் கேட்டபோது பூச்சி மருந்து குடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக சினேகாவை வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்த வையம்பட்டி போலீசார் சினோகாவின் உடலை மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.  

மேலும் இச்சம்பவம் குறித்து சினேகாவின் தாயார் சகாயராணி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்தனர். திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இன்று மாலை அரசு மருத்துவமனைக்கு வந்த கோட்டாட்சியர் சிந்துஜா சினோகாவின் தற்கொலை குறித்து அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். 

கோட்டாட்சியர் விசாரணை முடிய நீண்டநேரம் ஆகிவிட்டதால் நாளைதான் பிரேதபிரிசோதனை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. உடனடியாக பிரேதபரிசோதனை செய்து உடலை ஒப்படைக்கக்கோரி சினேகாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனையின் முன்பு மணப்பாறை – புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த  மணப்பாறை காவல்துறை துணை சூப்பிரண்டு ஜனனிபிரியா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைப்பதாக உறுதியளித்தார். 

இதனையடுத்து சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மணப்பாறை புதுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.