அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழிக்குள் கிடைத்த தங்கம்...!

ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் தற்போது தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழிக்குள் கிடைத்த தங்கம்...!

’உலக நாகரிகம் தோன்றிய முதல் இடம் ஆதிச்சநல்லூர்தான்’ : 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். ’உலக நாகரிகம் தோன்றிய முதல் இடம் ஆதிச்சநல்லூர்தான்’ என பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள், மெசபடோமியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளதாகவும், சில ஆய்வுகள் கூறுகின்றன. இங்கு முதன்முதலாக 1876-ல் அகழாய்வு நடந்துள்ளது.

169 முதுமக்கள் தாழிகள் : 

கடந்த 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் 169 முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து நீதிமன்றத்தில் விளக்கப்பட்ட பிறகுதான் அகழாய்வுப் பகுதியைச் சுற்றி கம்பிவேலி போட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இரண்டு முதுமக்கள் தாழிகளை கார்பன் சோதனைக்காக அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு அனுப்பியதில் ஒன்று ’கி.மு 905’, மற்றொன்று ‘கி.மு 791’ஐ சேர்ந்தது எனத் தெரிய வந்தது.

தொல்லியல் ஆர்வலர்கள் : 

மத்திய தொல்லியல்துறை அகழாய்வாளர்கள், தொல்லியல் ஆர்வலர்களின் மிகுந்த போரட்டத்திற்குப் பிறகு இதன் மாதிரி ஆய்வறிக்கையை மட்டும் சமர்ப்பித்தது . இங்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020-ம் ஆண்டும், இந்த ஆண்டும் தமிழக தொல்லியல்துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதற்கு மத்தியில், கடந்த 2019-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ’ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.

அகழாய்வு பணிகள் : 

இதையடுத்து, 160 ஒன்றிய நினைவுச்சின்னங்கள் மத்திய மற்றும் தெற்கு மண்டலத்தில் உள்ள 21 தொல்லியல் தளங்களை உள்ளடக்கி திருச்சி மண்டலம் உருவாக்கப்பட்டது. திருச்சி மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனருமான அருண்ராஜ் தலைமையில் அகழாய்வுப்பணிகள் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூர் பரம்புப் பகுதியில் மூன்று இடங்களில் 15 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி : 

இந்த அகழாய்வில் ஏற்கெனவே 12 முதுமக்கள் தாழிகள், சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்காக வாழ்விடப் பகுதிகள், சுமார் 2,500 ஆண்டுகள் முதல் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆதிச்சநல்லூரில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சுண்ணாம்புத் தளம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆதிச்சநல்லூரில் இரண்டாம் அடுக்கில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தாழிக்குள் மனிதனின் மண்டை ஓடு, கால் எலும்புகள், சிறு பானைகள், கலயங்கள் இருந்தன.

முதுமக்கள் தாழிக்குள் தங்கம் : 

இந்நிலையில், இன்று ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழ்வாராட்சியின் போது முதுமக்கள் தாழிக்குள் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். 3 செ.மீ நீளத்தில் இத்தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 
  
அலெக்சாண்டர் ரியா தனது 1902 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் விவரித்த அனைத்து குணாதிசயங்களுக்கும் இது சரியாக பொருந்தும் வகையில் உள்ளது. இதுவரை  நீண்ட கூர்மையான இரும்பு கருவி, சிறிய கூர்மையான அம்புகள், செப்பு கிண்ணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளநிலையில், தற்போது தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக சமீபத்திய அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பணக்கார கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருக்கலாம் என கூறியுள்ள மாவட்ட ஆட்சியர், மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண் மற்றும் அவரது இளம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் யதீஷ் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.