பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்தார் அமைச்சர் பொன்முடி...!

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்தார் அமைச்சர் பொன்முடி...!
Published on
Updated on
1 min read

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜுலை 22 ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியிலுள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதன்படி, ஜூலை 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 28 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை முதல் சுற்றாகவும், ஆகஸ்ட் 9 முதல் 28 ஆம் தேதி வரை இரண்டாம் சுற்றாகவும் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்தார். 

மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் என்றும், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் அனைத்து கலந்தாய்வுகளும் முடிந்த பின்னர், காலிப் பணியிடங்கள் இருந்தால் சிறப்புக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசு அங்கீகாரம் பெற்றுள்ள 430 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் உள்ளதாகவும், இது சென்ற ஆண்டை விட மூவாயிரத்து 100 இடங்கள் அதிகம் என்றும், 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரத்து 804 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சென்ற ஆண்டை விட 236 பேர் கூடுதலாக உள்ளதாகவும் தெரிவித்தார். 

பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் இல்லாமல் அனைத்து  இடங்களையும் நிரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், ஒரு கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் வேறு ஏதேனும் கல்லூரிக்கு செல்ல விரும்பினால் அவர்கள் கட்டிய பணத்தை திரும்ப கொடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி  தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com