CMDA திட்டத்தில் வடசென்னைக்கு முக்கியத்துவம் - அமைச்சர் உறுதி!

CMDA திட்டத்தில் வடசென்னைக்கு முக்கியத்துவம் - அமைச்சர் உறுதி!
Published on
Updated on
1 min read

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு, மூன்றாவது முழுமைத் திட்டத்திற்கான (2026-2046) தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது.

இத்திட்டம் அலுவலர்கள் அளவில் மட்டுமே திட்டமிடப்பட்ட நிலையில், மூன்றாவது முழுமைத் திட்டத்திற்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், திரை அரங்கங்கள், வணிக வளாகங்கள், கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் நேரடியாகவும், வலைத்தள வாயிலாகவும் கருத்து கணிப்புகளை கேட்கும் முயற்சியினை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) முன்னெடுத்துள்ளது. இதற்காக 14 கேள்விகள் அடங்கிய படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை, மெரினா கடற்கரை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே , சென்னை பெருநகரின் மூன்றாம் பெருந்திட்ட தொலைநோக்கு ஆவண விழிப்புணர்வு கையேட்டினை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் சேகர்பாபு, QR Code வாயிலாகவும், இணைய வழி வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வலியுறுத்தினார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஏப்ரல் மாதம் முழுவதும் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படவுள்ளதாகவும், இதுவரை 12 ஆயிரம் பேர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மேலும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள, மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com