முதியவருக்கு திடீரென நெஞ்சு வலி.. 60 பயணிகளுடன் மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்ற ஓட்டுநர்!!

தென்காசி அருகே பேருந்தில் பயணித்த முதியவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், 60 பயணிகளுடன் அரசுப் பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

முதியவருக்கு திடீரென நெஞ்சு வலி.. 60 பயணிகளுடன் மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்ற ஓட்டுநர்!!

தென்காசியில் இருந்து நெல்லை சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று, அடைக்கலபட்டணம் அருகே சென்ற போது, தென்காசியை சேர்ந்த சாகுல் ஹமீது என்ற முதியவருக்கு நெஞ்சு வலியுடன், கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநர் ஆறுமுகசாமி, நடத்துநர் இசக்கி ஆகியோர் உடனடியாக  பேருந்தை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதியவரை சிகிச்சைக்கு அனுமதித்த பின்னர், சுமார் 40 நிமிடத்திற்கு பிறகே பேருந்து புறப்பட்டது. அதுவரை பேருந்தில் இருந்த 60 பயணிகளும் பொறுமையாக காத்திருந்தனர்.

அந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் மருத்துவமனை கொண்டு சென்ற பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொறுமையாக காத்திருந்த பயணிகள் ஆகியோரால், மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதை இந்நிகழ்வு காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர்.