அமைச்சர் பழனியப்பனை பழிவாங்க தீக்குளிக்க சொன்ன கே.பி. அன்பழகன்!! ஊராட்சி மன்ற தலைவரின் பகீர் வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் பழனியப்பனை பழிவாங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை தீக்குளிக்குமாறு முன்னாள் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வலியுறுத்தியதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமைச்சர் பழனியப்பனை பழிவாங்க தீக்குளிக்க சொன்ன கே.பி. அன்பழகன்!!  ஊராட்சி மன்ற தலைவரின் பகீர் வாக்குமூலம்

தர்மபுரி மாவட்டம் மோலையானுரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி  முன்னாள் மோலையானுர் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தவராவார். இந்நிலையில் இன்று கிருஷ்ணமூர்த்தி சென்னையிலுள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் புகார் மனு ஒன்றை அளித்தார்.

 அந்தப் புகார் மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் அரசு ஒப்பந்தப் பணிகளை வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தன்னுடைய ஊராட்சிமன்ற தலைவர் பதவியை பழனியப்பன் அப்போதைய மாவட்ட ஆட்சியர் உதவியுடன் பறித்து விட்டார். அதனால் தான் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி, தற்கொலை முயற்சி வரை சென்றேன்.

 இதனை கேள்விப்பட்ட முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அவருக்கு பழனியப்பனுக்குமிடையே உள்ள பகையை தீர்த்துக் கொள்வதற்காகவும், பழனியப்பனுடைய அமைச்சர் பதவியை பறிப்பதற்காகவும் தன்னை அழைத்து பேசினார். தன்னிடம் பழனியப்பனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கூறி தலைமைச் செயலகத்தில் தீக்குளிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், முதல்வர் ஜெயலலிதா இப்படி செய்வதன் மூலம் நீ இழந்தவற்றை உனக்கு கிடைக்கச் செய்வார் எனவும், உனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் எனவும் கூறியதாக கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

 அதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி அமைச்சர் அன்பழகன் தன்னுடைய வாகனத்தில் 5 லிட்டர் பெட்ரோல் கேனை தலைமைச் செயலகத்திற்குள் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்து தீக்குளிக்க சொன்னார். அதன் அடிப்படையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வரும் போது நான் தீக்குளிக்க முயற்சித்தேன்.

 இதனைத் தொடர்ந்து அமைச்சர் பழனியப்பனுடைய பதவி பறிக்கப்பட்டது. அதன் பின்னர் பதவிக்கு வந்த அன்பழகன் தனக்கு எந்தவிதமான உதவிகளும் செய்யாமல் ஏமாற்றியதோடு தனது அரசியல் பலத்தை வைத்து தொடர்ந்து என்னை மிரட்டி வந்தார். அவரின் தூண்டுதலின்பேரிலேயே நான் தீக்குளிக்க முயன்றேன். ஆனால் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் தனது அரசியல் ஆதாயத்திற்காக தன்னை பலிகடா ஆக்கிவிட்டு மிரட்டவும் செய்வதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.