அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் மட்டும் சுமார் 25 ஆயிரத்து 689 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு,..சிஏஜி அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! 

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் மட்டும் சுமார் 25 ஆயிரத்து 689 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு,..சிஏஜி அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! 

அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழக மின்துறையில் சுமார் 25 ஆயிரத்து 689 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில், மின்சாரத்துறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், 2017 -18 காலக்கட்டத்தில் மின்தேவை 0.93 லட்சம் மில்லியன் யூனிட்டிலிருந்து 1.06 லட்சம் மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளதாகவும், இதில் 50 விழுக்காடுக்கு மேல் தமிழ்நாடு மின் பகிர்வு நிறுவனமான டான்ஜெட்கோ, மத்திய மற்றும் சொந்த உற்பத்தி மின் நிலையங்களில் இருந்து பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,மீதமுள்ள மின் தேவையை ஈடுகட்ட தனியாரிடம் இருந்து 29 ஆயிரத்து  758 புள்ளி 38 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதற்கென 13 ஆயிரத்து 564 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், இதற்கு சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் நிறுவு திறன் தேவையான அளவு அதிகரிக்கப்படாதது, மின்உற்பத்தி நிலையங்களில் குறைந்த செயலாற்றல், மத்திய மின் உற்பத்தி நிலைய திட்டங்களில் ஏற்பட்ட தாமதமே காரணம் என அறிக்கையில் குறை கூறப்பட்டுள்ளது. 

அதோடு கடந்த 2013-18 காலக்கட்டத்தில், டான்ஜெட்கோவின் சொந்த நிறுவும் திறன் 7831 மெகாவாட்டாக  உயர்ந்தபோது, அந்நிறுவனம் 5 பெரிய மின் அனல்மின் திட்டங்களை தொடங்க முற்பட்டதாகவும், ஆனால் அவற்றில் ஒன்று கூட செயல்படுத்தப்படவில்லை எனவும், மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலும் புதிதாக 6 திட்டங்கள் தொடங்கப்பட்டதால் மின் உற்பத்தி அதிகரித்ததாகவும், ஆனால் ராமகுண்டம் , தால்ச்சர் முதலிய மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின் பகிர்மானம் குறைக்கப்பட்டதால், டான்ஜெட்கோவிற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் குறைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதுமட்டுமல்லாது கடந்த 2013-18 காலக்கட்டத்தில் மின்சாரம் வழங்குவோரிடம் இருந்து  குறுகிய கால கொள்முதல் விலை யூனிட்டிற்கு 5 ரூபாய் 50 காசு என நிர்ணயிக்கப்பட்டதால், தனியாருக்கு 1,687 கோடி ரூபாயை டான்ஜெட்கோ செலுத்த நேரிட்டது என்றும், மின்கொள்முதல் தொடர்பாக ஜிண்டல் மற்றும் அதானி குழுமத்திடம் ஒப்பந்தம் இருந்தும் அந்நிறுவனங்கள் மின்சாரம் வழங்காததால், டான்ஜெட்கோ 1055 கோடி ரூபாய்க்கு தனியாரிடம் மின்சாரம் வாங்க நேரிட்டது என்றும், எரிபொருளில் இயங்கும் மின் உற்பத்தி நிறுவனமான ஜி. எம்.ஆருடன் ஒப்பந்தம் செய்து மின்சாரம் வாங்கியதன் காரணமாக அதிமுக அரசு 424 கோடியே 43 லட்சம் ரூபாயை வாரிவழங்கியிருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் மலிவு விலைக்கு மின்சாரம் வழங்கி வந்த மின்நிலையங்கள் அவ்வகை பகிர்மானத்தை நிறுத்திக்கொண்டதால், மின்துறைக்கு  349 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களின் மின் நிலையங்கள் செயல்பட தொடங்குவதற்கான கால அவசாகத்தை நீட்டித்த காரணத்தால் சூரிய மின்சக்தி கொள்முதலுக்கு கூடுதல் அதிக விலை கொடுக்க நேரிட்டது. இதன் காரணமாக டான்ஜெட்கோவிற்கு 605 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், நிலக்கரியில் இயங்கும் மின்நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் நிலக்கரி அதிகரித்ததால், அதன் கொள்முதலுக்காக 1,805 கோடி ரூபாய் செலவிட நேர்ந்துள்ளதாகவும், அதானி குழுமமும் யூனிட்டிற்கு கூடுதல் விலை நிர்ணயிக்க கோரி அடம் பிடித்ததால் ஏற்பட்ட 6 மாத இழுபறியால் டான்ஜெட்கோவிற்கு 101 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக அதிமுக ஆட்சியில், மின்துறையில் 25 ஆயிரம் கோடியே 689 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி தனது அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளது.