கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

கர்நாடகா காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு நீர் வரத்து, 2 ஆயிரத்து, 702 கன அடியிலிருந்து  6ஆயிரத்து, 498 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 53 புள்ளி 8 கன அடியிலிருந்து 54 புள்ளி 55 அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 20 புள்ளி 79  டிஎம்சியாக உள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக தற்போது, அது 250 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், வைகை அணையின் நீர் மட்டம் வேகமாமக அதிகரித்து வருகிறது. இரண்டு நாட்களில், 2புள்ளி 5 அடி உயர்ந்துள்ளது.  அதன்படி, 71 அடி  உயரம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம், தற்போது, 68 புள்ளி 50 அடியை எட்டியுள்ளது.  அணைக்கு விநாடிக்கு 2 ஆயிரத்து, 693 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், 5 மாவட்ட கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : ஆம்னி பேருந்துகள் செல்லும் வழித் தடங்கள் அறிவிப்பு...!

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையில் இருந்து கூடுதலாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அணைக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு,  2ஆயிரத்து, 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து, 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கலில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 
   
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோமுகி அணை அதன் முழு கொள்ளளவான 46 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.  இந்நிலையில், தற்போது 900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.