போதை பொருட்கள் தொடர்பான வழக்குகள் கடந்த ஆண்டைவிட அதிகம்  - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

கடந்த ஆண்டை விட இந்தாண்டு 50% அதிகபடியான போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளை பதிவு செய்துள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

போதை பொருட்கள் தொடர்பான வழக்குகள் கடந்த ஆண்டைவிட அதிகம்  - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

நாளை சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி மெரினா கடற்பரப்பில் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள போதை விழிப்புணர்வு குறித்த மணற்சிற்பத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். பின்னர் போதைக்கு எதிரான மாணவர்களின் நாடகத்தை கண்டுகளித்தார். இதனையடுத்து போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து காவல்துறை சார்பில் நடத்திய ஓவிய போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சைக்கிளை பரிசாக வழங்கினார்.மேலும் போதை பொருள் எதிரான ராட்சத பலூனை பறக்க விட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்ததாக 168 கடைகள் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும், வாரத்தில் இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்தாண்டு 50% அதிகபடியான போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளை பதிவு  செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் போதை பொருட்களை தடுக்க  பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், தொடர்ந்து போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருவதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி போதைக்கு அடிமையானவர்களை மீட்பதிலும், போதை பொருளுக்கு எதிராக 42,000 மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.