காரின் முன்பு விழுந்து தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமி....

திருப்பூர் மாவட்டம் அருகே போதை தலைக்கேறிய ஆசாமி, போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவ்வழியே வந்த காரின் முன்பாக விழுந்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.  

காரின் முன்பு விழுந்து தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமி....

பல்லடம் அடுத்த மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரது வாகனத்தை பறிமுதல் செய்து அவரது பெயர் மற்றும் விலாசம் குறித்து விசாரித்துள்ளனர். 

அதில் அந்த வாலிபர் குண்ணங்கள் பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ், என்பதும் அவர் அதிக மதுபோதையில் தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணியாமலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ரமேஷ் மீது டிடி எனப்படும் ட்ரிங்கிங் அண்ட் டிரைவ் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வாகனத்தை கைப்பற்றினர். பின்னர் அபராத தொகைக்கான ரசீதை ரமேஷிடம் கொடுத்துவிட்டு நாளை காலை அபராதத்தை செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த ஆசாமி ஆய்வாளர் சுப்பிரமணியிடம் இதெல்லாம் ஒரு பொழப்பா டா 500 ரூபாய் காசுக்கு பதிலாக போய் பிச்சை எடுடா என்றும் ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளால் அவரை திட்டி தீர்த்த படி வாகனத்தை ஒப்படைக்காவிட்டால் அவ்வழியே செல்லும் வாகனத்தில் விழுந்து செத்து விடுவேன் என்று கூறி மிரட்டிய வாரே அவ்வழியே வந்த காரின் முன்னே திடீரென ஓடிச்சென்று படுத்துக் கொண்டார். 

இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த கார் ஓட்டுனர் உடனடியாக வாகனத்தின் பிரேக்கை பிடித்து நிறுத்தினார். போதை ஆசாமியின் இந்த ரகளையால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டது. பொதுமக்களும் அங்கு திரண்டு வந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் அங்கு விரைந்து சென்று போதை ஆசாமியிடம் நாளை காலை வந்து அபராதத்தை செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல் என்றும் பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கினர். 

போலீசாரின் அறிவுரையை ஏற்க மறுத்த போதை ஆசாமி ரமேஷ், போலீசாரையும் ஆபாச வார்த்தைகளால் பேசியும் திட்டியும் தீர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் போதை ஆசாமியின் ரகளையை கண்டு ஆத்திரமடைந்த போலீசார், அவரை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், குடிபோதையில் உள்ளார் என சான்று அளித்தனர். அதனைத் தொடர்ந்து பல்லடம் காவல்நிலையத்திற்கு போதை ஆசாமியை அழைத்து சென்ற போலீசார்,  விடிய விடிய போதை தெளியும் வரை வைத்திருந்து சிறப்பாக கவனித்து பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்