ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் - ஓ.பி.எஸ். எச்சரிக்கை!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் - ஓ.பி.எஸ். எச்சரிக்கை!

அதிமுகவில் இருதரப்பு மோதலாக உருவெடுத்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை விட எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம், ஒற்றை தலைமை கொண்டுவரப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து, சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பா.வளர்மதி, வெல்லமண்டி என்.நடராஜன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ. பி.எஸ்சை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை  சந்தித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், திடீரென  ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று பின்னால் இருந்து யாரோ இயக்குவதாக சாடியுள்ளார்.

ஒருபக்கம் ஓ.பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், மறுபக்கம் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே. பி.அன்பழகன், சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ், ஆர் பி உதயகுமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினர்.

இதனிடையே,  அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை உட்பட நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து, இன்று மீண்டும் தீர்மானக்குழு ஆலோசனை நடத்த உள்ளதாக அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.