"குழந்தை திருமணத்தை ஆளுநர் ஆதரிக்கிறாரா..? " - அமைச்சர் பொன்முடி.

சிதம்பரம் நகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரம் 16 கால் மண்டப தெருவில் நடந்தது. நகர திமுக செயலாளரும், சிதம்பரம் நகர்மன்ற தலைவருமான கே. ஆர். செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சருமான டாக்டர் பொன்முடி பங்கேற்று திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,....
"சனாதனத்தை ஒழித்து இருப்பது திராவிட மாடல் ஆட்சி. பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிய உணர்வுகள்தான் அதை மாற்றி அமைத்து இருக்கின்றன. இந்த கவர்னர் என்ன சொல்கிறார்? சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு தாலி கட்டியது பற்றி சொல்கிறார். அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை எனக் கூறுகிறார். கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
குழந்தை திருமணம் என்பது சட்டரீதியாக மறுக்கப்பட்டது. பெண்களுக்கு 18 வயது ஆனால்தான் திருமணம் செய்ய வேண்டும். இங்கு நான் படித்த காலத்தில் இருந்தே தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தை திருமணம் சகஜமாக நடந்தது. அது இந்த வருடமும் நடந்தது. அதனால்தான் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அப்படி நடக்கக்கூடாது என்று சொல்லி நடவடிக்கை எடுத்தார். தீட்சிதர்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட பகைமை கிடையாது", என்றார்.
மேலும், எந்த பிராமின் மீதும் தங்களுக்கு தனிப்பட்ட பகைமை கிடையாது எனவரும் கூறினார். தொடர்ந்து அவர், " எங்கள் கட்சியிலும் புதுக்கோட்டை விஜயா போன்ற பிராமின்கள் இருக்கிறார்கள். தனிப்பட்ட எந்த பிராமின் மீதும் விரோதம் கிடையாது. ஆனால் அந்த ஜாதியை சொல்லிக்கொண்டு மற்றவர்களை அடிமைப்படுத்தக்கூடாது. அதுதான் திராவிட மாடல் ஆட்சி", என்றார்.
இதையும் படிக்க } "மிகப்பெரிய மோசமான எதிரி என்றால் ஜெயலலிதா....!"
அதோடு, "குழந்தை திருமணத்தை தீட்சிதர்கள் செய்தபோது அதை தடுத்து நிறுத்த வேண்டியது தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு பொறுப்பு இருந்த காரணத்தினால் அதை தடுத்து நிறுத்தி இருக்கிறார். இதில் என்ன தப்பு. ஆனால் இதுபற்றி கவர்னர் சொல்கிறார்.
குழந்தைகளுக்கு திருமணம் செய்யலாமா...? அப்படி என்றால் குழந்தை திருமணத்தை ஆளுநர் ஆதரிக்கிறார் என்றுதானே பொருள். இதை தடுத்து நிறுத்துவதில் என்ன தப்பு இருக்கிறது. குழந்தை திருமணம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. இதைத்தான் கவர்னர் சொல்கிறார். சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. அதற்கு உதாரணம் சிதம்பரம் என கூறுகிறார்", என்று சாடினார்.
இதையும் படிக்க } "தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கிற நில ஒருங்கிணைப்பு சட்டம்,......மோசடியான சட்டம்..! - பி.ஆர்.பாண்டியன்.