மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்...

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்த காவல்துறையினர், அதற்கு உடந்தையாக இருந்த மணப்பாறை காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்...

மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக வந்த புகாரையடுத்து, அப்பகுதிக்கு சென்ற திருவெறும்பூர்  பிஎச்இஎல் காவல்துறையினர், மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்தனர். மேலும் மணல் அள்ளப் பயன்படுத்திய ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து மணப்பாறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மணப்பாறை தி.மு.க கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆரோக்கியசாமி ஆட்களை வைத்து மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஆரோக்கியசாமியின் அழுத்தத்தின் பேரில், மணப்பாறை காவல் ஆய்வாளர் அன்பழகன், வாகனங்களையும், கைதானவர்களையும் விடுவித்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த சம்பவம் உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற நிலையில் விடுவிக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும் மணல் கடத்தலில் மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என அறிக்கை விட்டிருந்தார்.

இதையடுத்து ஆரோக்கியசாமியிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் குற்றவாளிகளை ஒப்படைக்க அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரோக்கியசாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட கார்த்திகேயன், பவுல் சேகர், மனோகர் ஆகிய 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், வாகனங்களை மீண்டும் பறிமுதல் செய்தனர். காவல்நிலையம் அழைத்து வந்தவர்களை விடுவித்ததாக மணப்பாறை இன்ஸ்பெக்டர் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி டி.ஜ.ஜி.ராதிகா உத்தரவிட்டுள்ளார்.