தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்..?  டெல்லியில் பரபரப்பு ஆலோசனை...

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்பது குறித்து டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்..?  டெல்லியில் பரபரப்பு ஆலோசனை...
தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனர் ஜே.கே.திரிபாதியின் பதவிக்காலம் வரும் 30 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அடுத்த சட்டம் ஒழுங்கு  டிஜிபி யார் என்ற கேள்வி, தமிழகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், காவல்துறையில் பணி மூப்பு அடிப்படையில் தகுதியான 11 உயரதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெஇறையன்பு மற்றும் உள்துறைச் செயலாளர் பிரபாகர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அந்த கடிதத்தில் இடம் பெற்றுள்ள உயரதிகாரிகள் பெயர்கள் இதோ...
 
சைலேந்திரபாபு, கரண் சின்ஹா, பிரதீப் வி.பிலிப், சஞ்சய் அரோரா, சுனில்குமார் சிங், கந்தசாமி, ஷகில் அக்தர், பிரமோத்குமார், ராஜேஷ்தாஸ், பிரஜேஜ் கிஷோர் ரவி, சங்கர் ஜிவால், முனைவர் ஏ.கே.விஸ்வநாதன், இந்த 11 உயரதிகாரிகளில் தகுதியான அதிகாரி யார் என்பது குறித்து வரும் திங்கள்கிழமை டெல்லியில் மத்திய பணியாளர் தேர்வாணையக் குழு ஆலோசனை நடத்தவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோர் வரும் 27 ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.
 
டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தற்போதைய டிஜிபி ஜே.கே.திரிபாதியும் கலந்துகொள்ள உள்ளார். டிஜிபி ரேஸில் உள்ள 11 அதிகாரிகளில், பணி மூப்பில் உள்ள ஐந்து அதிகாரிகளின் பெயர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். 5 அதிகாரிகளின் பணிக்காலத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா, துறை ரீதியான தண்டனை பெற்றிருக்கிருக்கிறார்களா என்று ஆய்வு நடைபெறும். அந்த அடிப்படையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜேஷ் தாஸ் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தகுதியான முதல் நான்கு அதிகாரிகளின் பட்டியல் அன்று மாலையே தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். 
 
நான்கு அதிகாரிகளில் இருந்து ஒரு அதிகாரி,  சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்படுவார். அந்த வகையில், பணி மூப்பு, எஞ்சியுள்ள பணிக்காலம், குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாத அதிகாரிகள் என்ற அடிப்படையில் சைலேநதிரபாபுவும், கரண் சின்ஹாவும் முதல் இரண்டு இடங்களில் உள்ளார்கள். இவர்களில் ஒருவர்தான், தமிழக அரசின் காவல்துறை தலைமை இயக்குனராக நியிமக்கப்பட வாய்ப்புள்ளது.
 
இந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவரை மத்திய தேர்வாணையக் குழு தேர்வு செய்து தெரிவிக்கும். அந்த வகையில், தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்பது வரும் 29 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும்.