நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? உயர்நீதிமன்றம் கேள்வி

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்ட போது உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?  உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தக் குழுவினர் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்ததுடன், இதுவரை மூன்று முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு சிறப்புக்குழு அமைத்து வெளியிட்ட அரசாணை, 2019ம் ஆண்டு மத்திய அரசு இயற்றிய மருத்துவ ஆணையச் சட்டத்திற்கு எதிராக இருப்பதாக கூறி பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பட்டை எடுக்க முடியாது என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் இந்த சிறப்பு குழு அமைக்கும் போது உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.