அய்யா வைகுண்டர் அவதாரத் திருநாள் விழா...4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!

அய்யா வைகுண்டர் அவதாரத் திருநாள் விழா...4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!

அய்யா வைகுண்டரின் 191 ஆவது அவதார நாளை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யாவைகுண்டரின் பிறந்த நாளான மாசி மாதம் 20 ஆம் தேதி, ஆண்டு தோறும் அய்யா வைகுண்டர் அவதார தின விழாவாக 'அய்யாவழி' சமூகத்தினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டுக்கான அய்யா வைகுண்டரின் அவதார திருநாளை முன்னிட்டு நெல்லை, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலுக்கு வந்தடைந்தனர். 

இதையும் படிக்க : வட மாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை...வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை...தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

அதனைத் தொடர்ந்து, நாகர்கோயில் நாகராஜாகோவிலில் இருந்து சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப் பதி நோக்கி பிரம்மாண்ட பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் அய்யாவின் 'அகிலதிரட்டு' புத்தகத்தை, காவிக்கொடி பக்தர்கள் பூப்பல்லக்கில் முத்துக்குடைகள் மற்றும் மேளதாளங்கள் முழங்க எடுத்து சென்றனர். இந்த பேரணியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

அப்போது, பாரம்பரிய முறைப்படி கோட்டார் சவேரியார் ஆலய நிர்வாகம் சார்பில் குருமார்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், தென்தாமரைகுளம் வழியாக சென்ற பேரணி சுவாமி தோப்பை சென்றடைந்தது. பேரணியை முன்னிட்டு நாகர்கோயில் முதல் சுவாமி தோப்பு வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.