தைப்பூசத் திருவிழாவையொட்டி...முருகனின் அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்...!

தைப்பூசத் திருவிழாவையொட்டி...முருகனின் அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்...!

தைப்பூசத் திருவிழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் :

தைப்பூச திருவிழாவையொட்டி ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து முருகப் பெருமானை தரிசித்தனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பாதை யாத்திரையாக நடந்து வந்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என விண்ணை பிளக்கும் வண்ணம் பக்தி பரவசத்துடன் முருகனை வழிபட்டனர். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் :

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரக்கூடிய பூச நட்சத்திரம், பௌர்ணமி ஆகிய இரண்டும் இணைந்து வரக்கூடிய நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கோயில் நடை அதிகாலை ஒருமணி அளவில் திறக்கப்பட்டது. பின்னர், விஸ்வரூப தீபாரதனையும், தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. 

பழனி முருகன் கோவில் :

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கும் பழனியில், மலையடிவாரத்தில் உள்ள குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க : இன்று 7 மணிக்குள் சமர்பிக்க உத்தரவு...ஆனால் ஓபிஎஸ் கேட்ட கேள்வி...அப்போ அதிமுக வேட்பாளர் யார்?

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் :

இதேபோல், முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ஆம் படை வீடான திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  அதிகாலையில் மூலவர் முருகப்பெருமானுக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மலைக் கோயிலில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி - தெய்வானை தாயாருடன் சிறப்பு வெள்ளிக் கவசம் மற்றும் புஷ்ப மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது, பக்தர்கள் அரோகரா !!! அரோகரா !!!! என்ற பக்தி கோஷத்துடன் மலைக் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பாலசுப்பிரமணியர் கோயில் :

இதேபோல், தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேதராக எழுந்தருளி உள்ள முருகப் பெருமானுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோயிலில் பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானை வழிபட்டனர்.

பால் குடம் எடுத்து வந்து அபிஷேகம் :

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சுப்பிரமணியர் திருக்கோவில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, பால் குடம் எடுத்து வந்த பெண்கள் உள்ளிட்டோர் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமான வழிபட்டனர்.