செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்க அனுமதி மறுப்பு.. 50 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிப்பு!!

செங்கல் சூளை வேலைக்கு தேவையான மண் எடுக்க அனுமதி வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்க அனுமதி மறுப்பு.. 50 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிப்பு!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், ராமநாதிச்சன்புதூர் உட்பட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் செங்கல் சூளைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீப நாட்களாக செங்கல் சூளைகளுக்கு தேவையான மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி மறுத்து வருவதால் இந்த தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்  கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பூங்கா சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல் சூளை உரிமையாளர்கள் உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கல் சூளை வேலைக்கு தேவையான மண் எடுக்க அதிகாரிகள் உடனடியாக அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.