களைகட்டிய அண்ணாமலையார் திருக்கோயில்...தொடங்கியது கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்...!

களைகட்டிய அண்ணாமலையார் திருக்கோயில்...தொடங்கியது கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்...!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று காலை 6 மணி அளவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அண்ணாமலையார் திருக்கோயிலில் தீபத் திருவிழா:

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். கார்த்திகை தீபத்தன்று 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள திருவண்ணாமலையில்  மகா தீபம் ஏற்றப்படும். திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு குவிவார்கள். 

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலையில் களைகட்டத் தொடங்கி உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் மற்றும், 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவம் நடைபெற்றது. பின்னர், விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

இதையும் படிக்க: ஈபிஎஸ்சிடம் பேச்சு போட்ட பாஜக மேலிடம்...அமைதி ஆன எடப்பாடி!

இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று காலை 6 மணி அளவில் நடைபெற்றது. கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில், மங்கல இசை ஒலிக்க, சிவாச்சாரியாளர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா, அரோகரா என அனைவரும் பக்தியுடன் முழக்கம் எழுப்பினர். 

கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக டிசம்பர் 6-ந் தேதி விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.