சென்னையில் குறைந்துள்ள கொரோனா பரவல் !!

சென்னையில் குறைந்துள்ள கொரோனா பரவல் !!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டே வருகிறது. 

அதிலும் அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப்பரவல் சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. 

குறிப்பாக அண்ணா நகரில் கொரோனாவிற்குச் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2258 நபர்களும் அதேபோல் கோடம்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2320 நபர்களாக  இருக்கிறது. தொற்று பாதிப்பைக் குறைக்க அந்தந்த மண்டலங்களில் கூடுதல் மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.

மாநகராட்சியில் தினமும் சராசரியாக 30,000 நபர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 30118 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 1789 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் சென்னையில் கொரோனா பரவல் விகிதம் 5.9% ஆக குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் சென்ற மே மாதம் 10ஆம் தேதி 26. 6% ஆக இருந்தது, இப்போது படிப்படியாகக் குறைந்து தற்போது 5.9% ஆக குறைந்துள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 15 ஆயிரத்து 18 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 303 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 24 ஆயிரத்து 290 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். குறிப்பாக  7425 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் 23,603 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 21 லட்சத்து 10 ஆயிரத்து 885 நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.