பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அறிவிப்பு பலகை வைக்காததால் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு...

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்காததே, விபத்துக்கு காரணம் என மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில்  அறிவிப்பு பலகை வைக்காததால் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு...

பரமத்திவேலூர் அடுத்துள்ள என்.ராசாம்பாளையத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அந்த பகுதி சாலையின் குறுக்கே, பாலம் அமைப்பதற்காக, சுமார் 6 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பகுதியில் பள்ளம் இருப்பதற்கான எவ்வித எச்சரிக்கை பலகையும், தடுப்புகளும் வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் எல்லப்பாளையத்தில் வசிக்கும் சுப்பிரமணி என்ற விவசாயி, இன்று அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் அந்த சாலை வழியாக சென்றபோது, எதிர்பாராத விதமாக பள்ளத்தில் வாகனத்துடன் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் சடலத்தை எடுக்க விடாமல் போராட்டம் நடத்திய  உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், பாலம் வேலை தொடர்பாக எவ்வித அறிவிப்பு பலகையையும் வைக்காத ஒப்பந்ததாரரை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை  தடுப்புகள் அமைக்கப்படாததால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  விபத்து நடந்து சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாகியும் இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.