கனமழை காரணமாக முழுகொள்ளவை எட்டிய அணைகள்... தண்ணீர் புகுந்ததால் சாலைகள் துண்டிப்பு...

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் ஒன்று, சிற்றார் இரண்டு ஆகிய அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.மேலும் பல கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக முழுகொள்ளவை எட்டிய அணைகள்... தண்ணீர் புகுந்ததால் சாலைகள் துண்டிப்பு...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று முழுவதும் விடிய விடிய மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நாகர்கோவிலில் இருந்து தடிக்காரகோணம் செல்லும் சாலையில் தெரிசங்கோப்பு, ஈசாந்திமங்கலம், வேர்கிழம்பி, வாழையத்து வயல் தடிக்காரன்கோணம், கீரிப்பாறை போன்ற பகுதியில் தண்ணீர் சூழ்ந்து சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் கீரிப்பாறை தற்காலிக பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்ப்பட்டது.

இதைப்போல் தெரிசங்கோப்பு தரைப்பாலமும் மூழ்கியது. 25 க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டதால் கீரிப்பாறை, கேசவன்புதூர் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் பழைய ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நிரம்பி வழிகிறது-மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குளித்துறை மற்றும் பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடுகிறது