வளர்ப்பு நாய் மாயம்... தேடி அலையும் குடும்பத்தினர்...

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வளர்ப்பு நாயை தேடி, குடும்பத்தினர் தினசரி அலையும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ப்பு நாய் மாயம்... தேடி அலையும் குடும்பத்தினர்...

வீடுகளில் சாதாரணமாக நாய்கள் வளர்ப்பது வழக்கம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாய்களை வளர்ப்பார்கள், வளர்ப்பு நாய்கள் பெரும்பாலும் வீடுகளை விட்டு வெளியே செல்லாது. மானாமதுரை சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர்ராஜ், இவரது மனைவி பாத்திமாராணி, இவர்களுக்கு இரு மகன்கள். இதில் இளையமகன் வினீத் பெங்களுரூவில் இருந்து பொமரேனியன் ரக நாயை கடந்த 12 வருடங்களுக்கு முன் வாங்கி வந்து பிரியமாக வளர்த்து வருகிறார்.

வீட்டில் ஒருவராகவே வளர்ந்து வந்த இந்த நாய்க்கு இடி சத்தம் கேட்டால் அலர்ஜி என கூறப்படுகிறது. வினீத் சென்னை சென்றிருந்த சமயம், இவரது தந்தை நாய் வெளியே சென்றதை கவனிக்காமல் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அப்போது மானாமதுரையில் பலத்த இடி சத்தத்துடன் மழை பெய்துள்ளது. இடி சத்தத்தை கேட்ட நாய் பயந்து போய் எங்கோ ஓடீப்போய் உள்ளது. இன்று வரை நாய் வீடு திரும்பவில்லை. நாயை காணாமல் வினீத் மற்றும் அவரது குடும்பத்தினர் பிட் நோட்டீஸ் அடித்து ஊர் ஊராக கொடுத்து வருகின்றனர். 

வாட்ஸ்அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் , டீகடைகள் உள்ளிட்டவற்றில் எல்லாம் விளம்பரப்படுத்தியும் இன்று வரை நாய் கிடைக்கவில்லை. நாய் கிடைக்காததால் குடும்பத்தினர் இன்று வரை சோகமாகவே உள்ளனர். பொதுவாக நாய் காணாமல் போனால் வேறு நாய் வாங்கி வளர்ப்பார்கள், ஆனால் 12 வருடங்களாக வளர்த்த நாயை காணாமல் பணம் செலவு செய்து இன்று வரை தேடி வரும் வினீத் குடும்பத்தினரை ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.