தொழில்துறை அமைச்சராக பதவி ஏற்றார் டி.ஆர்.பி ராஜா...!!

தொழில்துறை அமைச்சராக பதவி ஏற்றார் டி.ஆர்.பி ராஜா...!!

மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா இன்று காலை தொழில்துறை அமைச்சராக  பதவியேற்றுள்ளார். 

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி ராஜா  இன்று காலை தொழில்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி ராஜா, திமுக பொருளாளரும், நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் மகன் ஆவார். 3 முறை மன்னார்குடி தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற டி.ஆர்.பி ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளராகவும் உள்ளார்.

1976ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்த டி.ஆர்.பி.ராஜா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி பள்ளியில் பயின்றவர். சென்னை லயோலா கல்லூரியில் இளநிலைபடிப்பும், சென்னை பக்லைக்கழகத்தில் உளவியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றுள்ள டிஆர்பி ராஜா, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 'வாக்காளர்கள் மனநிலை' குறித்து ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

2021ம் ஆண்டு முதல் தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர், தமிழ்நாடு பொதுக்கணக்கு குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வருகிறார்.  2021 - 22ம் ஆண்டு வரை திமுக வெளிநாடு வாழ் இந்தியர்கள் அணியின் மாநில செயலாளராகவும், 2019 முதல் 2021ம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்துள்ளார் டி.ஆர்.பி.ராஜா.

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகப் பொறுப்பேற்றது முதல் 'ஐடி விங் 2.0' என்ற பெயரில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளைச் செய்தார் டிஆர்பி ராஜா. செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாகக் கொண்டாடி, ட்விட்டர் ஸ்பேசசில் தினம் ஒரு தலைவர் உரையாடல் என சமூக வலைதளத்தில் திமுகவின் இருப்பை வலுப்படுத்தினார். மேலும், சட்டப்பேரவையில் தொகுதி மக்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை அவ்வப்போது முன்வைப்பவர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதிருந்த நிலையில், டி.ஆர்.பி ராஜா தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிக்க:வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்...!!