திமுக தான் என்னை கடத்தியது...அதிமுக கவுன்சிலர் பகீர்...!

திமுக தான் என்னை கடத்தியது...அதிமுக கவுன்சிலர் பகீர்...!
Published on
Updated on
2 min read

என்னை துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறி கை, கால்கள் அடித்ததாகவும், அடிக்கடி மேலிடத்திலிருந்து அழைப்பு வந்ததாகவும் கடத்தப்பட்ட உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேர்தல்:

கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக திருவிகவும், திமுக வேட்பாளராக தேன்மொழியும் போட்டியிட்டனர்.  

நீதிமன்றம் உத்தரவு:

இதனிடையே மதுரை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.வி.க தேர்தலை முறையாக நடத்த கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்தலை முறையாக நடத்தவும், தேர்தல் அதிகாரி சீல் இடப்பட்ட கவரில் முடிவுகளை சமர்பிக்கவும், நீதிமன்றம் உத்தரவிடும் வரை முடிவுகளை வெளியிடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர். 

கடத்தப்பட்ட தி.ரு.வி.க. :

இந்த உத்தரவின்படி நேற்று நடைபெற்ற தேர்தலில், ஓட்டு போடுவதற்காக அதிமுக வேட்பாளர் தி.ரு.வி.கவை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது, வேடசந்தூர் பகுதியில் கார் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென்று மர்ம நபர்கள் அவர்களது காரை சுற்றி வளைத்து, கார் கண்ணாடிகளை உடைத்துவிட்டு அதிமுக வேட்பாளரை திருவிகவை கடத்தி சென்றுள்ளனர்.

அதிமுக - திமுக இடையே வாக்குவாதம்:

இந்த சம்பவத்தையடுத்து, துணைத்தலைவர் தேர்தலை நிறுத்தக்கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் அறிவிக்கப்படவில்லை.

தடைவிதிக்கக்கோரி மனு:

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர், அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்ட நிலையில் நடைபெற்ற தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், வரும் 22 ஆம் தேதி விசாரணக்கு வர உள்ள தேர்தல் வழக்குடன் சேர்த்து பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

திமுக தான் என்னை கடத்தியது:

இந்நிலையில், கடத்தப்பட்ட அதிமுக வேட்பாளர் தி.ரு.வி.க. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு, கல்வார்பட்டி சோதனைச் சாவடியில் மீட்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னை கடத்தியவர்கள் திமுகவினர் தான் என்று பகிரங்கமாக கூறினார். தொடர்ந்து, தன்னை 7 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாகவும், 3 மணி நேரம் நத்தம் காட்டுப் பகுதிக்குள் வைத்து சுற்றி சுற்றி வந்ததாகவும், மேலும் தன்னை துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறி கை, கால்களில் அடித்ததாகவும், அடிக்கடி அவர்களுக்கு மேலிடத்திலிருந்து போன் வந்ததாகவும், பிறகு என்னை விட்டுவிட்டு ஓடி விட்டதாகவும் தி.ரு.வி.க. கூறினார்.

பதிலடி கொடுத்த ஜெயக்குமார்:

தொடர்ந்து, சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரூரில் அதிமுக உறுப்பினர் கடத்தப்பட்டது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்றும், கரூரில் குண்டர்களை வைத்து தேர்தல் நடைபெற்றுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com