அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அதிமுகவை திமுக பழி வாங்குகிறது: ஈபிஎஸ்-ஓபிஎஸ் கண்டனம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அதிமுகவை திமுக பழி வாங்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டியுள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அதிமுகவை திமுக பழி வாங்குகிறது: ஈபிஎஸ்-ஓபிஎஸ் கண்டனம்
அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சியில் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும், சர்வாதிகாரப் போக்குடன் கட்சியின் தலைமை, நிர்வாகிகளை நியமித்து வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், அதிமுகவின் உட்கட்சித் தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடித்து விடுவதாக, அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ள கட்சி தலைமை, உட்கட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்தியது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்களது கட்சியினர் இல்லங்களில் சோதனை நடத்தப்படுவதாகவும் அதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயார் என்றும் கூறினார்.
 
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிச்சாமி  விழுப்புரம் மாவட்டத்தில்   ஜெயலலிதா பெயரில் அமைக்கப்பட்ட கல்லூரியை மூட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நடவடிக்கை எடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது  என கூறினார். நிதிநிலை இல்லை என்றால் மதுரையில் 200 கோடியில் நூலகம் அமைக்கப்படுவது ஏன் என்றும் பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.