திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியில் கூட்டுறவுதுறை சார்பில் கூட்டுறவு மருத்துக் கடையை தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் மற்றும் திமுக ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
விழா முடிந்து அங்கு திரண்டிரூந்த திமுகவினரிடம் பேசிக்கொண்டிருந்த ஒன்றிய செயலாளர் முருகேசனிடம், சின்னாளபட்டி அருகில் உள்ள முருகன்பட்டியை சேர்ந்த பாஜக ஆத்தூர் வடக்கு ஒன்றிய அமைப்பு சாரா ஒன்றிய தலைவர் கோபிநாதன் என்பவர் முருகேசனிடம், தங்கள் ஊருக்கு குடி தண்ணீர் பிரச்சனை இருப்பதால், அதனை தீர்த்து வைக்கவேண்டி கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து கூடியிருந்த திமுகவினருக்கும் கோபிநாதனுக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு கை கலப்பாக மாறியது. சின்னாளபட்டி திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் கோபிநாதனை ஆக்ரோஷமாக தாக்க முயன்றார். இருதரப்பினருக்கும் இடையே சாலையில் கடும்வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் கோபிநாதனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
முன்னதாக மருந்துக்கடை திறப்பு விழாவிற்கு வந்த அதிமுக பிரமுகர் பாரதிமுருகனை கடையைவிட்டு வெளியேற்றி, திமுகவினர் விரட்டிய பரபரப்பு அடங்குவதற்க்குள் அதே திமுகவினர் பிஜேபி பிரமுகரை தாக்கிய சம்பவம் மீண்டும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.