திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு...!

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு...!

நெய்வேலி என்.எல்.சி சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக முதலமைச்சர் கூறியிருப்பதாக திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பாலக்கிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, நெய்வேலி என்.எல்.சி  சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அழுத்தம் கொடுக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன், நெய்வேலியில் உள்ள பதற்றமான சூழல் குறித்து முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக தெரிவித்திருப்பதாக கூறினார்.  

இதையும் படிக்க : எந்த சட்டத்தை வைத்து அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர்...? சபாநாயகர் கேள்வி!

தொடர்ந்து பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், என்எல்சி  விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் எடுத்துரைத்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உரிய நிவாரணம் பெற்று  தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும்  தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் குறித்து பரிசீலித்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் கூறினார். அடுத்ததாக பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நிலம் தரும் மக்களுக்கு நிரந்தர வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.