ஏற்காட்டிலிருந்து மரங்கள் வெட்டி கடத்தல்...! ஆட்சியர் எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காத வனத்துறை...!

ஏற்காடு மலையில் இருந்து மரங்கள் வெட்டி கடத்தல்...! சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காத வனத்துறை..!

ஏற்காட்டிலிருந்து மரங்கள் வெட்டி கடத்தல்...! ஆட்சியர் எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காத வனத்துறை...!

ஏற்காடு மலையில் இருந்து அனுமதியின்றி டன் கணக்கில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகிறது. இதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலைத்தொடரில் ஏற்காடு மலை உள்ளது. சுற்றுலா தலமான இங்கு, தேக்கு, சில்வர் ஓக், காட்டு மரங்கள் ஏராளமாக உள்ளது. இதில், தனியார் எஸ்டேட்டுகளில் இருக்கும் மரங்களை கூட மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெற்ற பின்பு தான் வெட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், சமீபகாலமாக ஏற்காடு மலையில் இருந்து மரங்கள் வெட்டி கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. 

கடந்த வாரம் ஏற்காட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், 2 லாரிகளை மடக்கி பிடித்து சோதனை செய்தார். அப்போது அந்த லாரிகளில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். 

இந்த நிலையில் மீண்டும் ஏற்காடு மலையில் தினமும் டன் கணக்கில் பெரிய அளவிலான மரங்களை வெட்டி கடத்துகின்றனர். 30க்கும் மேற்பட்ட லாரிகளில், மர லோடுகள் இரவு, பகலாக கடத்தப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மலைகளை பாதுகாக்க வேண்டிய வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், தனியார் எஸ்டேட்களில் குறிப்பிட்ட அளவு மரங்களை வெட்ட அனுமதிக்கிறது. ஆனால், மிக அதிகளவு கணக்கில் வராமல் மரங்களை வெட்டிக் கடத்துகின்றனர். லஞ்சம் வாங்கிக்கொண்டு மரக்கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை விழா கொண்டாடப்படும் வேளையில், மரக்கடத்தலை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.