நடப்பாண்டு எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை... தமிழக அரசின் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்...

நடப்பாண்டு எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை சிவகங்கை அல்லது தேனி மருத்துவக் கல்லூரிகளில் நடத்தலாம் என  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை... தமிழக அரசின் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிக இடத்தில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு மற்றும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை ஆகியவற்றை தொடங்க உத்தரவிடக்கோரி, மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர்  மதுரைகிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கு தொடர்பாக, தமிழக சுகாதாரத்துரை செயலாளர் ராதாகிருஷ்ணனின் அறிக்கையை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்தார். அதில் ஏற்கனவே 50 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை தொடங்குவது குறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
 
மேலும் நடப்பாண்டு எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி அல்லது தேனி மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என  அரசு தரப்பில தெரிவிக்கப்பட்டது.
 
அத்துடன்  எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அனைத்து ஆய்வுகளுக்கும் முழுமையான ஆதரவு தர தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும்  எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அனைத்து நடவடிக்கைக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் எனவும் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.