தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு...

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு...

 இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இறைச்சி, மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்றும்., அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளின் நுழைவு வாயிலிலும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கட்டாயமாக கிருமி நாசினி வைத்திருக்கவும், உடல் வெப்ப நிலையை கணக்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும்.,அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கான பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொய்வில்லாமல் செயல்படுத்தவும்.,நோய் தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகளின் எல்லைகளை, நுண்ணளவு மூலம் வரையறை செய்து விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது..