
தமிழ்நாட்டில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மாதங்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த நிலையில், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்களைப் பிடித்து மீனவர்கள் விற்பனை செய்து வந்தனர். இதையடுத்து மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்த நிலையில், மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனர்.
இதனால், கடந்த இரண்டு வாரங்களாக மீன் வரத்து அதிகரித்து காணப்படுவதால் அசைவ பிரியர்கள் உற்சாகத்துடன் மீன்களை வாங்கிச் செல்கின்றனர். அதன்படி, விடுமுறை நாளான இன்றும் மீன் வாங்க ஏராளமான மக்கள் காசிமேடு துறைமுகத்தில் குவிந்து வருகின்றனர். அனைத்து வகையான மீன்களும் விற்பனை ஆவதால், விலையைப் பொருட்படுத்தாமல் மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
அதிகப்படியான மக்கள் வருகையால் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக மீனவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.