அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த பகுதிகள்... தமிழகத்தில் மழை குறையுமா..?

வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என தெரிவித்துள்ள இந்தியா வானிலை ஆய்வு மையம், அரபிக்கடலில் நாளை மாற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும் எச்சரித்துள்ளது. 

அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த பகுதிகள்... தமிழகத்தில் மழை குறையுமா..?

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பரவலாக மழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் மழை குறையத் துவங்கும் எனவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இதனால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நாளை மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.