பிரதமர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ் கட்சி சவால்...

ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்த முறைகேடுப் புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ் கட்சி சவால்...

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து, 36 ரபேல் போர் விமானங்களை 58 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்க 2015ஆம் ஆண்டில் மத்திய பாஜக அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, 2019ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு தொகுப்புகளாக ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ரபேல் விமானங்கள் கொள்முதல் விவகாரத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது 126 ரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்ததாகவும், அப்போது அவற்றின் விலை, தற்போது பாஜக அரசு வாங்கும் விலையைக் காட்டிலும் மும்மடங்கு குறைவு தான் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

மேலும் பாஜக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு, தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும் ரபேல் போர் விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதற்காக, சுஷேன் குப்தா என்ற இடைத் தரகருக்கு பல கோடி ரூபாய் பணத்தை டசால்ட் நிறுவனம் கொடுத்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இந்தியா உடனான ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் நாட்டின் தனி நீதிபதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக் காட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ரந்தீப் சிங் சுர்ஜீவாலா, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது, பிரதமரைக் கூட சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தும் அதிகாரம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.