மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜ.க. கூட்டுசதி :  பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!!

மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளதாக பி.ஆர். பாண்டியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜ.க. கூட்டுசதி :  பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!!

மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி நடத்தும் பாதயாத்திரை ஆர்ப்பாட்டத்தை கண்டித்து திருவாரூரில் இருந்து இன்று  தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மேகதாது அணைபகுதிக்கு சென்று நீதி கேட்டு பேரணி, முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று துவங்கிய இந்த பேரணியானது நாமக்கல் வழியாக வந்தது. இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நாமக்கல்லில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக சென்று பேரணியாக சென்றனர். இன்று தொடங்கிய இந்த பேரணியானது நாளை கர்நாடக மாநிலம் மேகதாதுவிற்கு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த பேரணியின் போது செய்தியாளர்களிடையே பேசிய தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக கட்சி கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை விலக்கி பாஜக தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை போல் செய்ய வேண்டும். தமிழக அரசு உட்பட அனைத்து அரசியல் கட்சியினரும் இப்போராட்டத்திற்கு முன் வர வேண்டும். மணல் கொள்ளையை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் எதிர்க்கிறது. மணல் கொள்ளையை தடுக்க அரசே மணல் குவாரியை எடுத்து நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

மணல் குவாரியை அரசே ஏற்று நடத்த முன்வந்துள்ளது. ஒரு யுனிட் மணல் ரூ. ஆயிரம் என கூறிக்கொண்டு மணல் கொள்ளைக்கு திமுக அரசு துணை போகுமோ என அச்சம் ஏற்படுகிறது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கொச்சைப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஆதரவாக பேசுகிறார். மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு எம்.பி., எம்.எல்.ஏக்கள் என அங்கம் வகித்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் வாக்களித்த மக்களை அவமானபடுத்துகின்றனர் என தெரிவித்தார்.