அதிமுக கூட்டத்தில் பிரியாணி-க்கு போட்டி... பீரோவை தூக்கிக் கொண்டு கரும்பு தோட்டத்துக்குள் ஓட்டம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரியாணியை துண்டிலும் வாளியிலும் முண்டியடித்து பெற்றுச் சென்ற மக்கள், பீரோவை தூக்கிக்கொண்டு ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதிமுக கூட்டத்தில் பிரியாணி-க்கு போட்டி... பீரோவை தூக்கிக் கொண்டு கரும்பு தோட்டத்துக்குள் ஓட்டம்!

செம்மேடு கிராமத்தில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓ பன்னீர் செல்வம், மேடையில் ஒரு சிலருக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு கிளம்பிச் சென்றார்.

இதைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகளை கண்ணிமைக்கும் நேரத்தில் பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.

நலத்திட்ட உதவிகள் அளிக்கும் நோக்கில் அரிசி மூட்டைகள் இருந்த இடத்தில் கூடியோர், மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போதும் மூட்டைகளை பெற்றுச் சென்றனர்.

இந்நிலையில் கல்யாண சீர்வரிசைக்காக வைக்கப்பட்டிருந்த பீரோவை ஒருவர் அலேக்காக தூக்க முயற்சித்து தட்டுத் தடுமாறி அதனை எடுத்துச் சென்றார். ஒருவர் பீரோவை தலையில் தூக்கிக்கொண்டு கரும்பு தோட்டத்திற்குள் மறைந்த நிகழ்வும் நடைபெற்றது.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று துண்டிலும், கட்டைப்பையிலும், வாளியிலும் மக்கள் பிரியாணியை எடுத்துச் சென்ற நிகழ்வும் அரங்கேறியது.

சரியான நிகழ்ச்சி நிரலில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படாததாலும், போதுமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படாததாலும் கட்டுப்படுத்த ஆளின்றி நடைபெற்ற இந்நிகழ்வுகள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.