கல்லூரிகளை இணைக்க கூடாது...! ஆட்சியரிடம் மனு கொடுக்க திரண்ட மாணவிகள்..!

ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியை - நெல்லை அரசு மகளிர் கல்லூரியுடன் இணைக்க மாணவிகள் எதிர்ப்பு. தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க திரண்டு வந்த மாணவிகளால் பரபரப்பு.

கல்லூரிகளை இணைக்க கூடாது...! ஆட்சியரிடம் மனு கொடுக்க திரண்ட மாணவிகள்..!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரி கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த 750 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

அந்த கட்டிடத்தில் போதியளவு இடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியை நெல்லையில் உள்ள ராணி அரசு மகளிர் கல்லூரியுடன் இணைக்க பல்கலைக் கழக நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர், இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட துணை ஆட்சியர் குணசேகரனிடம் அளித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.